கோத்தகிரியில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

கோத்தகிரியில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-04-28 14:10 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆட்டோ நிறுத்த பிரச்சினை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் கடந்த 30 வருடங்களாக ஆட்டோ ஸ்டேண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், இந்த ஆட்டோ ஸ்டேண்டை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் சென்று வர சிரமம் ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட உரிமையாளர் காவல்துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளுக்கு புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தின் ஓரத்தில் தான் ஆட்டோ ஸ்டேண்ட் செயல்பட்டு வருகிறது. எனவே ஆட்டோ ஸ்டேண்ட் அதே பகுதியில் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் மக்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது எனவும், அனைவரும் ஆட்டோக்களை அங்கு நிறுத்த மாட்டோம் என எழுத்து மூலமாக எழுதித் தர வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

சாலை மறியல் முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சங்கத் தலைவர் ஸ்டான்லி தலைமையில், தங்களது ஆட்டோக்களை காமராஜர் சதுக்கம், நேரு பூங்கா பகுதிக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் அங்குள்ள ஆட்டோ ஸ்டேண்டில் நிறுத்தி வைத்து, பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி சாலை மறியலுக்கு முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ராம்சந்த் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக மற்ற ஆட்டோ ஸ்டேண்ட் டிரைவர்களும் அங்கு திரண்டனர். இது குறித்து அறிந்ததும் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன், ரமேஷ் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர்களை நேரு பூங்காவிற்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன்

அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள், ஆட்டோ ஸ்டேண்ட் நிலம் சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 10 -ந்தேதி வெளிவரவுள்ளது. ஆனால் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கட்டிட உரிமையாளருக்கு சாதமாக செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து தங்களது ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், அவர்களிடம் பொதுமக்களுக்கு இடையூறில்லாத வகையில் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போலீசாரின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் சமாதானம் அடைந்த டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஆய்வு

இந்தநிலையில் நேரு பூங்காவில் வருகிற மே மாதம் 7,8 -ந் தேதிகளில் நடைபெறும் காய்கறி கண்காட்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை சூப்பிரண்டு சுரேஷ் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்