வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை: கலெக்டர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் போராட்டம்
வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஊட்டி
வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்நடைகள் மேய்க்க தடை
வனப்பகுதிகளில் உள்ள புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடம், வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகிய இடங்களில் கால்நடைகள் மேய்க்க கூடாது என்றும் மற்ற வனப்பகுதிகளில் வனத்துறையிடம் அனுமதி பெற்று கால்நடைகளை மேய்க்கலாம் என்றும் கடந்த மே மாதம் 17-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு விவசாய சங்க மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
மாநில அளவில் போராட்டம்
வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாக நீலகிரி உள்ளது. இங்கு மசினகுடி, கூடலூர் பகுதியில் கணிசமாக வாழ்ந்து வருகின்ற இருளர், குரும்பர், பணியர், காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் நாட்டு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கோத்தர் இன மக்கள் கோக்கால் என்ற பகுதியிலும், தோடர் இன மக்கள் மந்துகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கால்நடைகளை மேய்ப்பது பிரதான தொழிலாகும். இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பானது கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே தமிழக அரசு இதுகுறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் விவசாய சங்க தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் மணி, ராஜன், நவீன், சந்திரன், சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டரிடம் மனு
இதற்கிடையே கலெக்டரிடம் மனு கொடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காத்திருந்த நிலையில் கலெக்டர் வர தாமதமானதால் அவர்கள் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மதியம் 2.30 மணி அளவில் கலெக்டர் அம்ரித்திடம் நேரில் மனு கொடுத்தனர். முன்னதாக போராட்டத்தில் கலந்து கொள்ள தோடர் இன மக்கள் எருமை மாடுகளை அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.