ஆட்டோவில் பதுக்கிய ரூ.30 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: கைதான 3 பேர் அளித்த தகவலின் பேரில் போலீஸ் அதிரடி

ஆட்டோவில் பதுக்கி வைத்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை, கைதான 3 பேர் அளித்த தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-28 13:49 GMT
திருவொற்றியூர்,

சென்னை மணலி புதுநகரில் கடந்த 12-ந் தேதி ஒரு வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக மணலி புதுநகரைச் சேர்ந்த யுவராஜ் (வயது 37), மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் (33), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ் (24), திருவொற்றியூர் தாங்கலை சேர்ந்த ஜான்ஜோசப் (31), வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான் (38), செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக் (46) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 ரூபாய் கள்ளநோட்டுகள் ரூ.16 லட்சம், 3 கலர் பிரிண்டர்கள், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான கள்ளநோட்டு கும்பலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைதான யுவராஜ், இம்தியாஸ், ரசூல்கான் ஆகிய 3 பேரை மட்டும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை வண்ணாரப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஒன்றின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குறிப்பிட்ட அந்த ஆட்டோவில் போலீசார் சோதனை செய்தனர். அந்த ஆட்டோவின் இருக்கைக்கு அடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுகட்டாக பதுக்கிவைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்