மாணவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும்

மாணவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரன் பேசினார்.

Update: 2022-04-28 13:35 GMT
வேலூர்

மாணவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரன் பேசினார்.

பட்டமளிப்பு விழா

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 51-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சந்திரன் கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

ஒரு நாடு சிறப்பாக இருக்க நல்ல தலைவர்கள் வேண்டும். வருங்காலம் மாணவர்களாகிய உங்களை நம்பித்தான் உள்ளது. இளம்பருவம் மிகவும் சுறுசுறுப்பான பருவமாகும். இந்த வயதில் நீங்கள் கொள்கையை நிர்ணயித்து அதன்படி செயல்பட வேண்டும். 

அவ்வாறு செயல்பட்டால் எதிர்காலத்தில் பெரிய பதவிகளை அடையலாம். வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள். அதேவேளையில் இந்த பருவம் தடுமாறும் வயதும் கூட. தீய எண்ணங்கள் வரும். அதை கட்டுப்படுத்தி மனதில் கொள்கையை நிறுத்தி செயல்பட வேண்டும்.

அரசியல் வேண்டும்

மனதை ஒழுங்குபடுத்தி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சரியான வழியில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆரம்பத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.

 இதேநிலை எதிர்காலத்திலும் வரலாம். எனவே மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து அரசியலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் ஈடுபடாவிட்டாலும் கூட, அதுகுறித்து தெரிந்து இருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்திருந்தால் வருங்காலங்களில் நாட்டிற்கு தேவையான கொள்கைகளை உருவாக்க முடியும். 

தாய்க்கு நிகரானவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். அவர்களுக்குப் பணிந்து கற்றுக் கொண்டால் வாழ்வில் முன்னேறலாம். 

இவ்வாறு அவர் பேசினார்.

2050 பேருக்கு...

2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இக்கல்லூரியில் படித்த 2050 பேர் தேர்ச்சி பெற்றனர். கொரோனா காரணமாக அவர்களில் சிறந்த மாணவர்கள் 65 பேர் மட்டும் வரவழைக்கப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பட்டம் பெறக்கூடிய மற்ற மாணவர்கள் பார்க்கும் வகையில் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனுவாசகுமரன், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பத்மினி, பேராசிரியர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்