கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலை ரத்து செய்ததால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலை ரத்து செய்ததால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் செய்தனர்.
தேனி:
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான நேர்காணல் இன்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆனால், ரத்து செய்யப்பட்டது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு முறையாக முன்னறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தேனி ரத்தினம் நகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேர்காணலில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் பலர்
இன்று வந்தனர். அப்போது நேர்காணல் ரத்து செய்யப்பட்ட விவரம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், விரக்தி அடைந்த விண்ணப்பதாரர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு தேனி-பெரியகுளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.