பிரதமர், முதல்-அமைச்சருக்கு மாற்றுத்திறனாளி பெண் கடிதம்

தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க போவதாக பிரதமர், முதல்-அமைச்சருக்கு மாற்றுத்திறனாளி பெண் கடிதம் அனுப்பினார்.

Update: 2022-04-28 12:24 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. கூடைப்பந்து வீரர். அவருடைய மனைவி ஷர்மிளா. மூளை முடக்குவாத மாற்றுத்திறனாளி.

இந்த நிலையில் நேற்று ரமேஷ்பாபு தனது மனைவியை கைகளில் தூக்கிக் கொண்டு திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்துக்கு வந்தார். பின்னர் பிரதமர், தமிழக முதல்-அமைச்சர், டி.ஜி.பி., ஐகோர்ட்டு, பா.ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு பதிவு தபாலில் ஷர்மிளா சார்பில் மனு அனுப்பினர்.

இதுகுறித்து ரமேஷ்பாபு கூறுகையில், எனது மனைவிக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று கூறி எழுதி தரும்படி அவருடைய குடும்பத்தினர் தாக்கினர். இதுகுறித்து போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன் விஷ்ணுராம், மாற்றுத்திறனாளி கூடைப்பந்து அணி கேப்டனாக இருக்கிறார்.

 இந்திய விளையாட்டு ஆணையம் நிதி ஒதுக்காததால் அவர் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட முடியவில்லை. இதனால் எனது மகனும் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, வருகிற 10-ந்தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க போகிறோம், என்றார்.

மேலும் செய்திகள்