தொழிலாளி வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணம் கொள்ளை
கண்ணமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆரணி
கண்ணமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கூலித்தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 40), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ராதா (35). இவர்களின் மகன்கள் குமரன் (17), யோகேஷ் (13). இவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு, வீட்டின் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டும், முன்பக்க கதவை சாத்தி விட்டும் கோடையின் புழுக்கத்தால் காற்றுக்காக வீட்டின் மேல்மாடியில் படுத்துத்தூங்கினர்.
பின்னர் தண்டபாணி எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ேள சென்றார். அப்போது அறையில் பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த நகைகள், பணத்தைக் காணவில்லை.
மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை கடப்பாரையால் நெம்பி வளைத்து உடைத்து உள்ளே புகுந்து, பீரோ அருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம். இதுகுறித்து தண்டபாணி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை மற்றும் தடயவியல் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் விரைந்து வந்து, கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தார். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.