‘கியூட்’ நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில், கியூட் நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-04-28 11:25 GMT
சின்னாளப்பட்டி:

நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இந்த ஆண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பில் சேர ‘கியூட்’ என்னும் பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

 அதன்படி தேசிய தேர்வு முகமை சார்பில் தமிழகத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், கோவை அவினாசி மகளிர் நிகர்நிலைப்பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, கிராமப்புற ஏழை-எளிய மக்களை பாதிப்படைய செய்யும் கியூட் நுழைவுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தி இந்த பல்கலைக்கழகத்தை மக்கள் பல்கலைக் கழகமாக மாற்றுவோம் என்றார். 

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு காந்திகிராம பல்கலைக்கழக (பொறுப்பு) துணைவேந்தர் ரங்கநாதனை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது (பொறுப்பு) பதிவாளர் சேதுராமன், பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்