ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள், கால்நடைகளை பாதிக்கும் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாடுகளுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Update: 2022-04-28 11:20 GMT
தேனி:

விவசாயிகள் போராட்டம்
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என வனப்பகுதியை விட்டு வெளியேற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இந்தநிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும், மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடை செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மேய்ச்சல் மாடுகளுடன் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலை மாடுகளுடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று காலை புறப்பட்டனர். இதையடுத்து கடமலைக்குண்டு, வீரபாண்டி, வடுகப்பட்டி உள்பட பல இடங்களில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் மாடுகளுடன் விவசாயிகள் போராட்டத்துக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து மாடுகளை சில விவசாயிகள் திருப்பி அழைத்து சென்றனர். மற்ற விவசாயிகள் வாகனங்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

முற்றுகை
பின்னர் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, "மலைப்பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தை கூட வெளியேற்ற முடியாது. அதற்கு நாங்கள் விடமாட்டோம். ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதுகூட வனத்துறை அமைச்சருக்கு தெரியாதா?. நீதிமன்ற உத்தரவை ஏற்று மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக சொல்வதற்கு எதற்காக அமைச்சராக இருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். நீட் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லிவிட்டது. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளார். அதுபோல் இந்த மக்கள் வெளியேற்றுவதற்கு எதிராகவும் முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்றார்.

2 மணி நேரம்
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், மலை மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைக் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 2 மணி நேரத்துக்கும் மேல் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்தின் போது ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து விவசாயிகளையும், கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்