அரூரில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்திய 60 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
அரூரில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்திய 60 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு குற்றப்புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் அரூர் வட்ட வழங்கல் துறையினர் அடங்கிய குழுவினர் அரூர் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது 60 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. வேனில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அரூர் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 29), ராஜி (32) வீரன் (62) என்பதும், கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.