மாணவிகள் கடத்தல் வழக்குகளில் 4 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் கடத்தப்பட்ட வழக்குகளில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-27 21:09 GMT
சேலம்:-
வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் கடத்தப்பட்ட வழக்குகளில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி
சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ராஜேந்திரபிரசாத் (வயது 22), பெயிண்டர். இவர் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் பூனையன்வளவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை கடத்தி சென்றதாக அந்த மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். 
அதன்பேரில் ராஜேந்திர பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட மாணவியையும் போலீசார் மீட்டனர்.
தொழிலாளி கைது
ஓமலூர் அடுத்த மோளாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (23), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி, நேற்று முன்தினம் இரவு கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தனர். 
இதையடுத்து சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நண்பருடன் சிக்கினார்
தாரமங்கலம் அருகே உள்ள கோணகப்பாடி கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை, அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (23) என்ற வாலிபர் கடத்தி சென்றுள்ளார். இதற்கு அவருடைய நண்பர் மணி (24) என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து அந்த மாணவியை கடத்தியதாக லோகநாதன், அவருடைய நண்பர் மணி ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்