கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் 8 பேர் மீது வழக்குப்பதிவு
தொளசம்பட்டி அருகே கோவில் திருவிழாவையொட்டி ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றதாக கூறி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
ஓமலூர்:-
தொளசம்பட்டி அருகே கோவில் திருவிழாவையொட்டி ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றதாக கூறி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடன நிகழ்ச்சி
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் கோவில் திருவிழாக்கள் எதுவும் விமரிசையாக நடைபெறவில்லை. பெயரளவில் விழாக்கள் நடத்தப்பட்ட நிலையில், நடன நிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் எதுவும் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வால் கோவில் திருவிழாக்கள் மீண்டும் களை கட்டி உள்ளன. குறிப்பாக ஓமலூர், காடையாம்பட்டி, தொளசம்பட்டி பகுதிகளில் கோவில் திருவிழாக்களுடன் கலைநிகழ்ச்சிகளும் களை கட்டி வருகின்றன. இந்த பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களின் போது நடத்தப்படும், நடன நிகழ்ச்சியில் பெண்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு தற்போது ஆபாச நடனம் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
ஆபாச நடனம்
இந்த நிலையில் அமரகுந்தி பகுதியில் நேற்று முன்தினம் பெரியாண்டிச்சி அம்மன் தெவ விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் நிர்வாகிகள் சார்பில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியை காண அக்கம்பக்கம் கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.
ஆனால் நடன நிகழ்ச்சியில் ஆபாசமாகவும், முகம் சுழிக்கும் அளவிற்கு உடையணிந்து ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் நடனமாடியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை வாலிபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர்.
8 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் தொளசம்பட்டி போலீசார் நேற்று இதுகுறித்து விசாரணை நடத்தி நடன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான அமரகுந்தியை சேர்ந்த இளங்கோவன், துரைசாமி, மாதவன், தாண்டா கவுண்டர், சந்துரு, ராஜா ஆகிய 6 பேர் மீதும் நடன நிகழ்ச்சி நடத்திய செல்வம், தினகரன் ஆகிய 2 பேர் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.