சேலம் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி

சேலம் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Update: 2022-04-27 21:09 GMT
சேலம்:-
சேலத்தை சேர்ந்தவர் பரணிராஜன் (வயது 36). இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது முகநூலுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் தான் லண்டனில் டாக்டராக பணியாற்றி வருகிறேன் என்று அறிமுகமாகி உள்ளார்.
பின்னர் இருவரும் வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாறி வந்தனர். இந்த நிலையில் இவரது வாட்ஸ் அப் எண்ணிக்கு அந்த பெண் அனுப்பியது போன்று வந்த குறுஞ்செய்தியில் தங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளேன் என்று இருந்தது.
இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி டெல்லியில் இருந்து சுங்க அதிகாரி பேசுகிறேன். தங்களுக்கு ஒரு பார்சல் வந்து உள்ளது. அதற்கு ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 900 வரி கட்ட வேண்டும். அதன் பிறகு தான் பார்சல் வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அவர் 6 தவணைகளில் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 900 செலுத்தி உள்ளார்.
ஆனால் அவருக்கு பார்சல் வரவில்லை. இதனால் பணம மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. இது குறித்து அவர் சேலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் டாக்டர் போல் அறிமுகமாகி ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் மோசடி செய்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்