தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்; பெங்களூரு மாநகராட்சி வேண்டுகோள்
தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு பெங்களூரு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 102 சதவீதம் போடப்பட்டு உள்ளது. 2-வது டோஸ் 96 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
15 முதல் 17 வயதுக்கு உட்டோருக்கு 55 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநகராட்சி ஆஸ்பத்திரிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தகுதியானவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி கூறியுள்ளது.