சத்தியில் புதிய கட்டிடத்தில் புகுந்த கோதுமை நாகம்
சத்தியில் புதிய கட்டிடத்தில் புகுந்த கோதுமை நாகம் பிடிபட்டது.
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அப்துல் கலாம் வீதியில் எட்வின் பிரபு என்பவர் புதிதாக கட்டிட பணியை மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் கட்டிடத்தை பார்ப்பதற்காக உள்ளே சென்றார். அப்போது கட்டிட பணிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்குள் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்ததை கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் ரங்கராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கட்டிட பொருட்களுக்கு இடையே சுருண்டு கிடந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, ‘பிடிபட்டது கோதுமை நாகம். சுமார் 4 அடி நீளமுடைய இந்த பாம்பு கொடிய விஷத்தன்மை கொண்டது.’ என்றனர். பிடிபட்ட கோதுமை நாகத்தை தீயணைப்பு வீரர்கள் ஒரு சாக்குப்பையில் போட்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.