துயரத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை

தஞ்சை தேர் விபத்து துயரத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை என்றும், இதனை அரசியல் ஆக்கக்கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2022-04-27 20:38 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை தேர் விபத்து துயரத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை என்றும், இதனை அரசியல் ஆக்கக்கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
வார்த்தைகள் இல்லை
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய விபத்தில் 11 பேர் பலியானார்கள். இது தாங்க முடியாத துயரம் ஆகும். இந்த துயரத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, சட்டசபையில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அரசு சார்பில் ஆறுதல் கூறினேன். தஞ்சை மண்ணின் மைந்தன் என்கிற முறையில் நான், அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துள்ளேன். அத்துடன் விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம், தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம்
படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., சார்பில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து சரியான காரணத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கவும் என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆக்கக்கூடாது
இதனை அரசியல் ஆக்க வேண்டும் என சிலர் ஈடுபட்டு உள்ளனர். அரசியல் ஆக்கக்கூடாது. என்பதுதான் என்னுடைய எண்ணம். போற்றுவார், தூற்றுவார் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. 
மக்களுக்கு துயரம் ஏற்படாமல் காக்கவும், அதையும் மீறி இதுபோன்ற துயரங்கள் ஏற்படும்போது மக்களோடு இருக்க வேண்டும் என்பதும்தான் அரசின் இலக்கு. அதை நோக்கியே பயணிப்போம். விசாரணைக்கு பிறகு முழுமையான தகவல் அளிக்கப்படும். விபத்து குறித்து அறநிலையத்துறை, மின்துறை அமைச்சர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்