வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அரவக்குறிச்சி அருகே வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2022-04-27 19:55 GMT
கரூர்
அரவக்குறிச்சி,
சாலை மறியல்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ராஜபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகே மேட்டுக்கடை, கீழத்தலையூர், பாரதியார்நகர் என்ற பகுதிகள் உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இதில் 26 குடும்பத்தினருக்கு இவர்கள் இருக்கும் வீடுகள் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது என்றும், 15 தினங்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.         இதனைக்கண்டித்து நேற்று காலை சம்பந்தப்பட்ட மேட்டுக்கடை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று போலீசார் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜசேகர் தலைமையில், அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பிரச்சினை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்