நூல் விலை தொடர்ந்து உயர்வு வருவதை கண்டித்து கரூரில் மே முதல் வாரத்தில் வேலை நிறுத்தம் நடைபெறும்

நூல் விலை தொடர்ந்து உயர்வு வருவதை கண்டித்து கரூரில் மே முதல் வாரத்தில் வேலை நிறுத்தம் நடைபெறும் என கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கூறினார்.

Update: 2022-04-27 19:54 GMT
கரூர்
கரூர், 
பேட்டி
கரூரில் நேற்று கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் நகரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்து, அதில் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றன.
நூல்களின் விலை உயர்வு
 இதனால் கரூர் நகரம் மத்திய அரசினுடைய சிறப்பான ஏற்றுமதி நகரம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சீன நாட்டில் இருந்து ஜவுளி பொருட்களை வாங்கி கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்கள் தற்போது இந்திய ஜவுளி நிறுவனங்களோடு வர்த்தகத்தை அதிகப்படுத்தவும ஒப்பந்தங்கள் செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பருத்திவிலை கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக மத்திய அரசு இறக்குமதி மீதான வரியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து செயற்கையாக விலை ஏற்றம் கண்ட பருத்தி விலை குறையும் என்ற எதிர்பார்ப்போடு ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இருந்தனர். இந்தநிலையில் பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்கிய ஒரே வாரத்தில் கரூர் நகரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான நூல்களின் விலையை ஒரு கிலோவிற்கு ரூ.10 வீதம் ஏற்றி அறிவித்துள்ளது.
வேலை இழக்கும் அபாயம்
நூல் விலை ஏற்றம் தொடர்ந்து நீடித்தால் பருத்தி நூலை அதிக அளவில் பயன்படுத்தி வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் கரூர் ஜவுளி நிறுவனங்கள் அவர்களுடைய வர்த்தக ஒப்பந்தங்களை இழக்கும். அது மட்டுமல்லாமல் புதிய ஒப்பந்தங்களை பெறுவதும் இயலாத செயல் ஆகிவிடும். மேலும், ஒப்பந்தங்களை தக்க வைக்காமல் புதிய ஒப்பந்தங்களை பெறாமல் உற்பத்தியை குறைப்பது அல்லது உற்பத்தியை நிறுத்துவது தவிர ஜவுளி நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
வேலை நிறுத்தம்
எனவே மத்திய, மாநில அரசுகள் பஞ்சு ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும், உடனடியாக செயற்கை விலை ஏற்றத்தை தடுத்து நூல் விலையை குறைக்க ஆவண செய்ய வேண்டும், பருத்தி ஏற்றுமதிக்கு நூல் ஏற்றுமதிக்கு வழங்கும் ஏற்றுமதி ஊக்கத் தொகையை நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கவுரவ தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் சுகுமார், பொருளாளர் அசோக் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்