என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு

என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-27 19:49 GMT
நெய்வேலி, 

நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஐ.டி.ஐ. நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பகுதி என்று கூறி, அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் மற்றும் மின் இணைப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகளுடன் மனு அளிப்பதற்காக நேற்று காலை என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது என்.எல்.சி. நிறுவன தலைவர் வெளியூர் செல்ல இருந்ததால், அவரை சந்தித்து மனு அளிக்க இயலாது என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை வீரர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் அலுவலகம் முன்பு ஒன்று கூடி நின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள், என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள், என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குனர் சதீஷ் பாபுவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், என்.எல்.சி. இரண்டாம் சுரங்கம் தொடங்குவதற்கு முன்பாகவே நாங்கள் இப்பகுதியில் குடியேறி வசித்து வருகிறோம். 

இப்பகுதி மாணவ-மாணவிகள் என்.எல்.சி. நிறுவனம் நடத்தும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போது பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தங்கள் குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். மேலும் என்.எல்.சி நிறுவனத்திற்கு எப்போது தாங்கள் வசிக்கும் பகுதி தேவைப்படுகிறதோ, அப்போது என்.எல்.சி. நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட செயல் இயக்குனர், இதுதொடர்பாக என்.எல்.சி. நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்