தந்தையின் இறுதிசடங்கை செல்போனில் பார்த்து கதறி அழுத வாலிபர்

தேரில் மின்சாரம் தாக்கிய விபத்தில் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தந்தையின் இறுதி சடங்கை செல்போனில் பார்த்தபடி கதறி அழுதார்.;

Update: 2022-04-27 19:40 GMT
தஞ்சாவூர்;
தேரில் மின்சாரம் தாக்கிய விபத்தில் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தந்தையின் இறுதி சடங்கை செல்போனில் பார்த்தபடி கதறி அழுதார்.
விவசாயி சாவு
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை தேரோட்டத்தின் போது களிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் (வயது 56) என்பவரும், அவருடைய மகன் அருண்குமார் (24) என்பவரும் தேரில் வந்தனர். இந்த நிலையில் மின்சாரம் தாக்கியதில் தேர் எரிந்ததோடு, தேரில் இருந்த மற்றும் அருகில் வந்து கொண்டிருந்த 11 பேரும் பலியானார்கள்.
இதில் மின்சாரம் தாக்கியதில் செல்வம் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் அருண்குமார் காயம் அடைந்தார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்போனில் பார்த்து கதறல்
இந்த நிலையில் இறந்த செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் களிமேட்டில் உள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் செல்வத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமாரால் தனது தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை செல்போன் மூலம் வீடியோகாலில் காண்பித்தனர். அதனை பார்த்த அருண்குமார் கதறி அழுதார்.
கண்ணீரை வரவழைத்தது
அப்போது அருகில் இருந்த உறவினர்கள் அருண்குமாரை சமாதானப்படுத்தினர். மேலும் டாக்டர்களும், அவரை அழ வேண்டாம் என கூறினர். இது அங்கிருந்தவர்களின் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது.

மேலும் செய்திகள்