அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ரூ.1500 ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்த இவர்களுக்கு, தற்போது ரூ.5 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது. இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வரும் 205 பேரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
முற்றுகை
இதனால் உடனடியாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொகுப்பூதிய ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் இல்லாததால் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் தொகுப்பூதியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினார் இதையடுத்து தொகுப்பூதியர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.