தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

புவனகிரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-04-27 19:16 GMT
கடலூர், 

புவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). புவனகிரி சாத்தப்பாடி அக்ரகாரதெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற விஜயன் (58). அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை பிரிக்காமல் வைத்திருந்தனர். அதை விஜயன் அனுபவித்து வந்தார்.

இதற்கிடையில் மலேசியாவில் வேலை பார்த்து வந்த கணேசனின் மகன் குருசேவ் (30) திருமணம் செய்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து கடந்த 8.4.2018 அன்று கணேசன், குருசேவ், உறவினர் சீர்காழி தெற்கு தெருவை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் அபினாஷ் (24) ஆகிய 3 பேரும் விஜயன் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த அவரிடம் கணேசன் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய இருப்பதால், பூர்வீக இடத்தில் வீடு கட்ட இடம் தருமாறு கேட்டார்.

வெட்டிக்கொலை

அதற்கு விஜயன் இடத்தை கொடுக்க மறுத்து, அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயன், அவரது மகன் கோபிநாத் (24) ஆகிய 2 பேரும் கணேசன், குருசேவ், அபினாஷ் ஆகிய 3 பேரையும் தாக்கினர்.
தொடர்ந்து குருசேவ், அபினாஷ் ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடி, துடித்து இறந்தனர். இது பற்றி கணேசன் புவனகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயன், கோபிநாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் 25-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயன், கோபிநாத் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கதிர்வேலன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்