மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே குரும்பலூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தியாகு. இவரது மனைவி ராசம்மாள் (வயது 55). இவரை நேற்று முன்தினம் காலை கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் ராசம்மாள் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராசம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.