இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 2 பேருக்கு தலா 32 ஆண்டு சிறை மற்றொருவருக்கு 5 ஆண்டு தண்டனை
வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
வேலூர்
வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். அந்த பெண்ணும் அதே கடையில் வேலைபார்த்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி வேலை முடிந்த பின்னர் இரவு 9 மணி அளவில் அந்த இளம்பெண்ணும், வாலிபரும் வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
3 பேர் கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன் (வயது 43), வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்ற கோழி (21), தொரப்பாடி பெரியஅல்லாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற கொய்யாமாரி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் விக்னேஸ்வரி ஆஜராகி வாதாடினார். நீதிபதி கலைபொன்னி விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு அளித்தார்.
தலா 32 ஆண்டுகள் சிறை
அதில் இளம்பெண்ணை மிரட்டுதல், தாக்குதல், பொருட்கள் பறிப்பு, கடத்தல், பாலியல்பலாத்காரம் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உள்பட மொத்தம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த மாரிமுத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாருக்கு பாராட்டு
இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 3 பேருக்கு வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து இந்த வழக்கில் சிறப்பாகசெயல்பட்ட விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் புனிதா, அரசு தரப்பு வக்கீல் விக்னேஷ்வரி மற்றும் காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2020-ம் ஆண்டு குற்றம் நடைபெற்ற வேலூர் கோட்டை பகுதியில் தொடர் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேலூர் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் பேசி வருகிறோம். மேலும் தற்போது வேலூர் மாவட்டத்தில் பாலியல் தொடர்பான குற்ற செயல்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
பழைய பாலியல் வழக்குகள் மீது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற வழக்கை தடுக்க போதிய நடவடிக்கைகளை முழுமையாக எடுத்து வருகிறோம் என்றார்.