நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா

நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-04-27 18:44 GMT
பெரம்பலூர், 
தூய்மை பணியாளர்கள் தர்ணா
பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று தங்களது பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை உரியவரின் கணக்கில் செலுத்த வேண்டும். கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.580-ஐ நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தூய்மை பணியாளர்களில் சிலரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் ஒப்பந்ததாரர் பெரம்பலூர் வரவுள்ளதாகவும், அவரை வைத்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என்றும், தற்போது பணிக்கு செல்லுமாறு  அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து தங்களது பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்