கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் முளைப்பாரி திருவிழா திரளான பெண்கள் கலந்து கொண்டனர்
காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காசாம்பூ நீலமேனி கருப்பர்கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்திரை திருவிழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா நிகழ்ச்சி தொடங்கியது. இதைதொடர்ந்து தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் கருப்பர் மற்றும் வண்ணாத்தாள் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று முளைப்பாரி திருவிழா நடந்தது. இதையொட்டி நவதானியங்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை சுமந்தபடி பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் கறம்பக்குடி குளக்காரன்தெரு, தென்னகர், அக்ரஹாரம், தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று கோவில் வளாகத்தை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முளைப்பாரியை கோவில்குளத்தில் விட்டு பெண்கள் பூஜை செய்தனர். பின்னர் வாணவேடிக்கை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.