சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்த பெண்ணுக்கு மிரட்டல்; 2 பேர் கைது
ராமநாதபுரம் அருகே தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்வதற்காக கோர்ட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்வதற்காக கோர்ட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணுக்கு மிரட்டல்
ராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கோட்டை தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா மனைவி விஜயகுமாரி (வயது 42). இவரின் தந்தை சுந்தர்ராஜன். கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக விஜயகுமாரி ராமநாதபுரம் கோர்ட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை இந்த வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் ஓம்சக்திநகர் சீனிவாசன் (42), பாசிப்பட்டறை தெரு முருகேசன் (34) ஆகிய இருவரும் வழிமறித்தனர். பின்னர் அவர்கள், தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னால் உன் தந்தையை போல் உன்னையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்களாம்.
கைது
இதனால் அச்சமடைந்த விஜயகுமாரி, இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.