சாலை வசதியின்றி கிராமமக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே சாலை வசதி இல்லாமல் கிராமமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-04-27 18:27 GMT
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே சாலை வசதி இல்லாமல் கிராமமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை வசதி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த நல்லுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஆம்பல் கூட்டம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவருமே அன்றாட கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஆம்பல் கூட்டம் கிராமத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த கிராமத்திலிருந்து நல்லுக்குறிச்சி கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்பல்கூட்டம் கிராமத்தின் கண்மாய் கலுங்கு அருகே கிராமத்திற்கு செல்லும் 100 மீட்டர் சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமாக உள்ளது. 
தற்போது பெய்த மழைக்கு அவர்கள் செல்லும் பாதையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளதால் தண்ணீர் எடுக்கச் செல்லும்  பெண்கள் அந்த சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். வயதான முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் அவசர தேவைக்கு கூட ஆம்புலன்சில் ஏற்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
கோரிக்கை
இதனால் அப்பகுதி மக்கள் சாலை இல்லாததால் சுடுகாட்டுக்குள் சென்று வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சுடுகாட்டுப் பகுதியில் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இதனால் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிறு தரைப்பாலம் அமைத்து அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்