சுதந்திர போராட்ட வரலாறு புகைப்பட கண்காட்சி
சுதந்திர போராட்ட வரலாறு புகைப்பட கண்காட்சி
ராமேசுவரம்
ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகே உள்ள புயல் காப்பக கட்டிடத்தில் நேற்று மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தலைமை இயக்குனர் டாக்டர் வசுதா குப்தா குத்துவிளக்கேற்றி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின்மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியார், முத்துராமலிங்கத்தேவர், ஒண்டிவீரன், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், சிங்காரவேலன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் புகைப்படங்களும் அவர்களின் போராட்டங்களின் தன்மைகளும் இடம் பெற்றிருந்தன. சுதந்திரப் போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படங்களை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.