கொல்லிமலையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கொல்லிமலையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

Update: 2022-04-27 18:25 GMT
நாமக்கல்:
கொல்லிமலையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக கொல்லிமலை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள கொல்லிமலை சாரல் உணவகம் விரிவாக்கம் செய்வதற்கான இடத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் தேவனூர்நாடு ஊராட்சி அரிப்பிலாப்பட்டி கிராமத்தில் ரூ.2¼ லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பசுமைக்குடில் அமைத்து 3 ஆயிரம் சில்வர் ஓக் மரக்கன்றுகள், 1,000 பாக்கு மரக்கன்றுகள் வளர்க்க நாற்றங்கால் அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொல்லிமலை வரும் சாலையோரத்தில் பூத்து குலுங்கும் ஜெகந்தா மலர் விதைகளை சேகரித்து மரக்கன்றுகள் உருவாக்க ஊராட்சி தலைவருக்கு அறிவுறுத்தினார்.
தார்சாலை மேம்பாடு
தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு கான்கீரிட் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ், அரிப்பிலாப்பட்டி கிராமத்தில் வீடு கட்ட கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களின் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பத்தார்களிடம் விசாரணை செய்தார்.
தேவனூர் நாடு ஊராட்சி கட்டாங்காட்டுபட்டி பகுதியில் 60 குடும்பங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றார்கள். கடைகோடி கிராமமான கட்டாங்காட்டுபட்டி கிராமத்திற்கு செல்லும் 1 கி.மீ. மண் சாலையை தார்சாலையாக மேம்பாடு செய்ய நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் மின்விளக்கு வசதி உள்ளதா ? என்றும், அருகில் உள்ள சுகாதார நிலையம் குறித்தும் கேட்டறிந்தார். வெண்டலப்பாடி முதல் சேட்டூர் வரை செல்லும் சாலை தார்சாலையாக மேம்பாடு செய்யப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேவனூர் நாடு, விளாரம், பெரும்பரப்புபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்ட ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு படத்தொகுப்புகளை கொண்டு, கற்றல் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டார்.
ரேஷன் கடை
மேலும் அரிப்பிலாப்பட்டி ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள பொருட்களின் இருப்பினை சரிபார்த்தார். பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி சரிபார்த்தார். பெரிய கோவிலூரில் சுற்றுலா பயணிகள் கொல்லிமலையின் இயற்கை அழகை கண்டுகளிக்க அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரத்தில் ஏறி பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது பழங்குடியின நல அலுவலர் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாதேஸ்வரி சிவக்குமார், தேவனூர் நாடு ஊராட்சி தலைவர் சாரதா சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்