மனுநீதிநாள் முகாமில் ரூ, 1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

திருப்பத்தூர் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.1.75 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-04-27 18:05 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசுகையில், ‘‘தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நமது மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் குறைதீர்வு நாளின்போது 70 சதவீத மனுக்கள் வருவாய்த்துறை சார்ந்ததாக உள்ளது. பட்டா மாற்றம் இலவச வீட்டுமனை பட்டா போன்ற மனுக்கள் அதிகளவில் வருகிறது. ஜூலை மாதத்துக்கு முன்பாக தகுதிவாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி, வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ், தாசில்தார் சிவப்பிரகாசம், ஊராட்சி  தலைவர்கள் செல்லம்மாள், சரோஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்