குளச்சல் அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம்:மதுபோதை தெளிய குளத்தில் மூழ்கடித்த போது இறந்தது அம்பலம்;நண்பர் கைது

குளச்சல் அருகே வாலிபர் குளத்தில் விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மது போதை தெளிய தண்ணீரில் மூழ்கடித்த போது இறந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2022-04-27 23:28 IST
குளச்சல், 
குளச்சல் அருகே வாலிபர் குளத்தில் விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மது போதை தெளிய தண்ணீரில் மூழ்கடித்த போது இறந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வாலிபர் சாவு
குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் குச்சிராயன்விளையை சேர்ந்தவர் செல்லநாடார். ஓய்வு பெற்ற ெரயில்வே போலீஸ்காரர். இவரது மகன் ரமேஷ் (வயது35), கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
கடந்த 16-ந் தேதி அதிகாலையில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கென்னடி ஜோஸ், சிம்சன் ஆகியோர் கொடுமுட்டி கரையாகுளத்தின் படித்துறையில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது ரமேஷ் திடீரென தவறி குளத்தில் விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் வந்து குளத்தில் இருந்து பிணத்தை மீட்டனர். தொடர்ந்து குளச்சல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சாவில் மர்மம் 
இதற்கிடையே ரமேசின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதன் விவரங்கள் வருமாறு:-
கடந்த 16-ந் தேதி ரமேஷ், கென்னடி ஜோஸ், சிம்சன் ஆகிய 3 பேரும் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது ரமேசுகு போதை அதிகமானது. இதனால், போதையை தெளிய வைக்க கென்னடி ஜோஸ், ரமேசின் முகத்தை தண்ணீர் மூழ்க செய்து எடுத்தார். 
அவ்வாறு பல முறை மூழ்க செய்தபோது ரமேஷ் மூச்சு திணறி இறந்து போனார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாடகமாடினர்
இதையடுத்து ரமேசின் உடலை குளத்தில் தூக்கி வீசிவிட்டு தவறி விழுந்து இறந்ததாக  நாடகமாடினர்.
இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நண்பர் கென்னடி ஜோசை நேற்று குளச்சல் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கமின்றி அஜாக்கிரதையாக முகத்தை நீரில் மூழ்க செய்து இறப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நண்பர் சிம்சனை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்