திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ெதரிவித்தார்.

Update: 2022-04-27 17:45 GMT
திருவாரூர்:
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்று 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ெதரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீச்சல் பயிற்சி  வகுப்புகள் 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தை  அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கும் கடந்த 20-ந்தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி வரை  நடத்தப்பட உள்ளது.
மாதத்திற்கு இரண்டு முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் ரூ.1,180. பயிற்சி கட்டணத்தினை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது ஜிபே மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். 
ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும்
கட்டணம் செலுத்த வரும் போது ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் ஆகும். நீச்சல் குளம் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை இயங்கும்.
பெண்களுக்கு மாலை 4 மணி முதல் 5  மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீச்சலின் பயன்கள, உடலில் உள்ள தேவையற்ற எடை குறைவதுடன், தொப்பையை குறைக்கும். நீச்சலின் போது நீர் உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாக பயன்படுகிறது. உடலின் உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
உடற்பயிற்சி நீச்சல் தான் 
மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளாறுகள் நீங்கும். நீந்தும் போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒரு நிலையடைகிறது. உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. கை, கால், தொடைப்பகுதி தசைகள் வலுப்பெறுவதுடன் மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும். இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் முடிச்சுகள் பலம் பெறுகின்றன.
கழுத்து வலி, தோள்பட்டை வலி நீங்கும். செரிமான சக்தியை தூண்டி, அஜீரணக் கோளாறை போக்கும், நன்கு பசியை தூண்டச்செய்யும். மலச்சிக்கல் நீங்கும். ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஓரே சமயத்தில் இயக்கக்கூடிய உடற்பயிற்சி நீச்சல் தான். பெண்களுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தரக்கூடியது நீச்சல்.
எனவே உடலுக்கும் உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுங்கள். மேலும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான நீச்சல் குள பயன்பாட்டு கட்டணம் ரூ.59 ஆகும். 
ஆண்டு சந்தா 
மேலும் உறுப்பினர்களுக்கான மாத சந்தா ரூ.708, காலாண்டு சந்தா ரூ.1,416, அரையாண்டு சந்தா ரூ.2,124, ஆண்டு சந்தா ரூ.3,540 மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான (2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள்) ஆண்டு சந்தா ரூ.7,080 மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு சந்தா ரூ.2,360 செலுத்தப்பட வேண்டும்.
மேற்படி சந்தா பயிற்சி கட்டணம் மற்றும் சந்தா தொகைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது ஜிபே மூலம் மட்டுமே செலுத்தி, நீச்சல் குளத்தினை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல் பெற மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தொலைபேசி எண் 04366-290620  அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை நேரடியாக 7401703500 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்