வேளாண் விளை பொருட்களை இணையதள டெண்டர் மூலம் விற்பனை செய்வது எப்படி

வேளாண் விளை பொருட்களை இணையதள டெண்டர் மூலம் விற்பனை செய்வது எப்படி என்பது பற்றி தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2022-04-27 17:43 GMT
முத்தூர்
வேளாண் விளை பொருட்களை இணையதள டெண்டர் மூலம் விற்பனை செய்வது எப்படி என்பது பற்றி தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு முகாம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வாய்க்கால்மேட்டுப்புதூர் கிராமத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் க.தங்கவேல் தலைமை தாங்கினார். வேளாண் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் கார்த்திக் குமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) செயல்முறை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், சூரியகாந்தி விதைகள் உட்பட தங்களது பல்வேறு வேளாண் விளை பொருட்களை தரம் அடிப்படையில் இணையதளம் டெண்டர் ஏலம் மூலம் விற்பனை வணிகம் மேற்கொள்வது பற்றி விவசாயிகள், மொத்த கொள்முதல் வியாபாரிகளுக்கு விரிவாக விளக்கி கூறப்பட்டது.
இணையதளம் மூலம் டெண்டர்
தொடர்ந்து மாவட்ட வேளாண் மற்றும் விற்பனை வணிகத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வேளாண் விளை பொருட்களை வாகனம் மூலம் ஏலத்திற்கு கொண்டு வரும் விவசாயிகள், நுழைவு வாயிலில் இணையதளம் மூலம் விவரம் பதிவு செய்யும் வழிமுறைகள், வியாபாரிகள் தர நிர்ணயத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்து இணையவழி இணையதளம் மூலம் டெண்டர், ஏலம் கோரும் வழிமுறைகள், ஏல மேலாண்மை கடைப்பிடித்தல், எடை மேடையில் விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்களை அளவீடு செய்தல்.
 இணையதள டெண்டர் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கான ரொக்கத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு இணையதளம் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் மொத்தமாக செலுத்தும் வழிமுறைகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்களை வியாபாரிகள் வாகனங்களில் வெளியே எடுத்து செல்லும் வழிமுறைகள் ஆகியவை பற்றி வேளாண் விவசாயிகள், கொள்முதல் வியாபாரிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
முகாமில் சுற்றுவட்டார விவசாயிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்ட மொத்த கொள்முதல் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ஏக மூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்