பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை

பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடந்தது.

Update: 2022-04-27 17:42 GMT
வேலூர்

பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடந்தது.

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம்

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் கடந்த மாதம் 17-ந் தேதி காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு ஆண் நண்பருடன் இரவில் சினிமா பார்க்க சென்றார். சினிமா முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் பெண் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சத்துவாச்சாரி வ.உ.சி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (வயது 20), பரத் என்கிற பாரா (18), மணிகன்டன் (21), சந்தோஷ்குமார் என்கிற மண்டை (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

சிறுவன் சென்னை கெல்லீசில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேரும் வேலூர் மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர். சிறுவனை தவிர மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மனநிலை திறன் பரிசோதனை

இந்தநிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு 17 வயது 6 மாதங்கள் ஆகிறது. அவர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி நிர்பயா வழக்கின் அடிப்படையில் அவருக்கும் தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பெண் டாக்டர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று சென்னையில் இருந்து சிறுவன் வேலூருக்கு அழைத்து வரப்பட்டான். அவனுக்கு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவர் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்த நடைமுறை குறித்து போலீசார் கூறியதாவது:-

தண்டனை கிடைக்கும்

டெல்லி நிர்பயா வழக்கில் தொடர்புடைய ஒருவர் இளஞ்சிறார் என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பல்வேறு சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 16 வயதுக்கு மேல் 18 வயது நிரம்பாதவர்கள் யாராவது கொடுங்குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களின் மனநிலை 18 வயது நிரம்பியவரின் மனநிலைக்கு ஈடாக இருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

எனவே, வேலூர் பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவனுக்கு தண்டனை பெற்றுத்தர இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று இனி வருங்காலங்களில் குற்றங்களை தடுக்கவே காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வாலிபரின் மனநிலை 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மனநிலைக்கு ஈடாக இருப்பதாக பரிசோதனை முடிவு வரப்பெற்றால் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, இவருக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்