காட்பாடியில் உயிர் பயத்துடன் சாலையைக் கடக்கும் மாணவிகள் உயர் நடைமேடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உயிர் பயத்துடன் சாலையை கடக்கின்றனர். இங்கு உயர் நடை மேடையை அமைக்க வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-27 17:33 GMT
காட்பாடி

காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உயிர் பயத்துடன் சாலையை கடக்கின்றனர். இங்கு உயர் நடை மேடையை அமைக்க வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக போக்குவரத்துள்ள நெடுஞ்சாலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வருவாய் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பின்பு வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு என 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்துள்ள தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. குறிப்பாக, இந்த நெடுஞ்சாலை தான் தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கிறது. அதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. எப்போதும் இந்தச் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகக் காணப்படுகிறது. 

குறிப்பாக, பொதுப்போக்குவரத்தான வேலூர்- சித்தூர், வேலூர்- திருப்பதி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் செல்கின்றன. காட்பாடி- பாகாயம் டவுன் பஸ்களும் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. அனைத்து டவுன் பஸ்களும் காட்பாடியில் உள்ள வள்ளிமலை கூட்ரோடு வரை சென்று திரும்புகின்றன.

பஸ்களில் அலைமோதும் பெண்கள் கூட்டம்

அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம், என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பலர் அரசு பஸ்களை போக்குவரத்துக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசு பஸ்களில் எப்போதும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு முதல் பஸ் நிறுத்தம் ஆகும். அதை விட்டால் அடுத்து காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இங்கே அதிகம் பேர் பஸ்களில் ஏறுவார்கள். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும். 

குறிப்பாக பள்ளி மாணவிகள், வணிகர்கள், பொதுமக்கள் இந்தப் பஸ் நிறுத்தத்தைத் தான் பயன்படுத்துகின்றனர். அதனால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சாலையைக் கடக்க சிரமப்படும் மாணவிகள்

பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடிந்த பின்னர் சாலையைக் கடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக காலை, மாலையில் அவர்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவிக்கின்றனர். ஏனென்றால், வேலூரில் இருந்து வரும் வாகனங்கள் இடைவிடாமல் தொடர்ந்து செல்கின்றன. பள்ளி முன்பு போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் யாரும் நிற்பதில்லை. குடியாத்தம் கூட்ரோடு ஜங்ஷனில் தான் போக்குவரத்துப் போலீஸ்காரர் இருப்பார். அவர் வேலூரில் இருந்து வரும் வாகனங்களையும், கிழித்தான்பட்டறை பகுதி வழியாக காட்பாடிக்கு வரும் வாகனங்களையும் கட்டுப்படுத்தி அனுப்புவார்.

பள்ளி முன்பு போக்குவரத்துப் போலீசார் யாரும் இல்லாததால் மாணவிகள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். 5 அல்லது 10 மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து தான் வரிசையாக சாலையைக் கடந்து செல்கின்றனர்.
இதில் ஏதேனும் ஒரு வாகனம் மோதி விடுமோ என்ற அச்சத்திலேயே சாலையைக் கடக்கின்றனர். மாணவிகள் செல்கிறார்கள் என எந்த வாகன ஓட்டியும் நின்று செல்வதில்லை. அப்போதுதான் இன்னும் வேகமாகச் செல்வார்கள். இதனால் மாணவிகள் தினமும் ஒருவித பதற்றத்துடனேயே சாலையைக் கடந்து செல்கின்றனர்.

மரண பயத்தை ஏற்படுத்தும் சாலை

கல்வி கற்க வரும் பள்ளி மாணவிகளுக்கு மரணப் பயத்தை ஏற்படுத்துகிறது இந்தத் தேசிய நெடுஞ்சாலை. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை சென்டர் மீடியன் இருக்கிறது. அதனால் பள்ளி மாணவிகள் இந்தச் சாலை வழியாகத்தான் வந்து கடந்து செல்ல வேண்டும். இவர்கள் காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலையில் 4.20 மணி முதல் மாலை 5 மணி வரையும் சாலையைக் கடந்து செல்கின்றனர். 

அந்த நேரத்தில் சாலை மிகவும் நெரிசல் மிகுந்ததாக இருக்கும். பஸ், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் தான் அதிகமாக காட்பாடியில் இருந்து வண்டறந்தாங்கல், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம், சன்பீம் பள்ளி, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வரை செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தச் சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் காலை, மாலை மட்டும் அல்லாது எப்போதுமே இந்தச் சாலை பரபரப்பாகக் காணப்படும். கார், பஸ்கள் தான் வேகமாக செல்கிறது என்றால் பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற அவசரத்தில் ஆட்டோ டிரைவர்களும் வேகமாகச் செல்கின்றனர்.

வேகமாக செல்லும் ஆட்டோ டிரைவர்கள்

தமிழகத்திலேயே அதிக ஆட்டோக்கள் ஓடுவது வேலூர், காட்பாடியில் தான். ஆட்டோ டிரைவர்கள் எப்போது எப்படி திரும்புவார்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களது பின்னால் வாகனங்களில் சென்றால் திடீரெனச் சிக்னல் காட்டாமல் திரும்புவார்கள். மேலும் சாலையில் யாரையாவது பார்த்தால் திடீரெனப் பிரேக் போட்டு நிறுத்தி விடுவார்கள். இதனால் பின்னால் வாகனங்களில் வருபவர்கள் ஆட்டோ மீது மோதி கீழே விழ வேண்டும்.

 இல்லையென்றால் கட்டுப்பாட்டை இழந்து விழ வேண்டியதுதான். 
ஆட்டோக்களில் வெகுசிலரே முழுமையான சீருடையை அணிந்து ஆட்டோ ஓட்டுகின்றனர். ஆட்டோ டிரைவர்களிலும் வயதானவர்கள் பொறுமையாகத்தான் ஆட்டோ ஓட்டுகின்றனர். அரசு பள்ளி முன்பு சாலை இறக்கம் என்பதால் சில ஆட்டோ டிரைவர்கள் வேகமாகச் செல்கின்றனர்.

உயர் நடை மேடையை அமைக்க வேண்டும்

பள்ளி முன்பு சாலையைக் கடக்க மாணவிகள் மட்டும் சிரமப்படுவதில்லை. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய வருபவர்களும், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களும், உழவர் சந்தைக்கு காய்கறிகளை வாங்க வருபவர்களும், காட்பாடி ரெயில் நிலையத்துக்கு உழவர்சந்தை வழியாக செல்பவர்களும் எனப் பலதரப்பட்ட மக்கள், வணிகர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதனால் பெண்கள் பள்ளி முன்பு உயர் நடை மேடை அமைக்க வேண்டும் எனப் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் சாரதி மாளிகை முன்பு உள்ள உயர் நடை மேடை போல் காட்பாடியிலும் அமைக்க வேண்டும், என்கின்றனர். அவ்வாறு நடை மேடை அமைத்தால் மாணவிகளும், பொதுமக்களும் சாலையை எளிதாக நடைமேடை வழியாகக் கடப்பார்கள். மரணப் பயம் அவர்கள் முகத்தில் தெரியாது. 

எந்த நேரத்தில் எந்த வாகனம் மோதி விடுமோ என்ற அச்சம் இருக்காது. கல்வி கற்க வரும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் வந்தால்தான் கல்வியை எளிதாகக் கற்க முடியும். இல்லையென்றால் அதில் கவனம் செலுத்த முடியாது. எனவே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு உயர் நடைமேடை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் ெதாடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்