ஒன்றியக்குழு தலைவரை பொதுமக்கள் முற்றுகை
லத்தேரி அருகே ஒன்றியக்குழு தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி காலனியில் மாதத்தில் ஒருசில நாட்களே 100 நாள் வேலை தரப்படுகிறது. பல ஆண்டுகளாக குழாயில் ஆற்று தண்ணீர் வருவது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனை கண்டித்தும் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்யக்கோரியும் கே.வி.குப்பம் ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் டி.மோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா முருகேசன், ஊராட்சி செயலாளர் பி.விசுவநாதன் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது மக்கள் தொகை அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 100 நாள் வேலைவாய்ப்பு பகிர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் பதிக்க ரூ.23 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு, குழாய்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் விரைவில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.