ஆட்கள் பற்றாக்குறையால் கரும்பு வரத்து குறைந்து அரவை நிறுத்தம்
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரைஆலையில் வெட்டாட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் கரும்பு வரத்து குறைந்து அடிக்கடி கரும்பு அரவை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரைஆலையில் வெட்டாட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் கரும்பு வரத்து குறைந்து அடிக்கடி கரும்பு அரவை நிறுத்தம் செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அரவைக்கு தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னிகரும்பும், 1000ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 8ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கரும்பு வெட்டாட்கள்
கரும்பு வெட்டுவதற்கான கூலி ஆட்கள் குறைவாகவே உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வெட்டாட்கள் அதிகமாக உள்ள பன்ருட்டி, லாலாபேட்டை, எடப்பாடி, தர்மபுரி, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு வெட்டும் ஆட்களை அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு அரவை நிறைவடைய உள்ள நேரத்தில், அரவை நிற்பதற்கு முன்பு தங்களது விளைநிலங்களில் உள்ள கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பி விட வேண்டும் என்று கருதும் விவசாயிகள், கரும்பு வெட்டாட்களுக்கு கூலியை உயர்த்தி கொடுப்பர். அதனால் பல கரும்பு வெட்டாட்கள் அவ்வாறு அரவை நிறைவடையும் நிலையில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு வெட்டி முடிந்த பிறகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்து சேர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு வெட்டுவதற்கு இந்த அரவைப்பருவத்திற்கு வெட்டுக்கூலியாக டன்னுக்கு ரூ.850 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்பு வெட்டுக்கூலி விவசாயியின் கரும்பு கிரையத்தொகையில் இருந்து பிடித்து, கரும்பு வெட்டாட்களுக்கு வழங்கப்படும்.
எரிபொருள் பற்றாக்குறை
நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை கடந்த 6-ந் தேதி தொடங்கியது. ஆனால் வெட்டாட்கள் பற்றாக்குறையால் கரும்பு வரத்து குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை ஒருநாள் கூட முழு அரவைத்திறனுக்கு கரும்புஅரவை செய்யப்படவில்லை. நேற்று காலை 6 மணி வரை மொத்தமே 5 ஆயிரத்து 419 டன்தான் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கரும்பு வெட்டாட்கள் பற்றாக்குறையால் ஆலைக்கு கரும்பு வரத்து குறைந்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு முறையும் கரும்பு அரவையை நிறுத்தி, மீண்டும் அரவையைத்தொடங்கும் போது கொதிகலனில் ஸ்டீம் அழுத்தம் படிப்படியாகத்தான் அதிகரிக்கும். அப்போது கொதிகலனுக்குத் தேவையான எரிபொருள் கூடுதலாக செலவாகும். இந்த நிலையில் தற்போது ஒருபுறம் வெட்டாட்கள் பற்றாக்குறையால் கரும்பு வரத்து குறைவாக இருக்க, மற்றொரு புறம் எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை அரவை தொடங்கப்பட்டு நேற்று காலை 6 மணி வரை 465 டன் கரும்பு அரவை செய்யப்பட்டிருந்தது. எரிபொருள் பற்றாக்குறையால் காலை 7 மணிக்கு கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.