கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்
குடியாத்தம் கெங்கயைம்மன் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கயைம்மன் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த திருவிழா தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கெங்கையம்மன் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, கோவில் நிர்வாக அதிகாரிகள் திருநாவுக்கரசு, செந்தில்குமார், மாதவன், தக்கார் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் வரவேற்றார்.
வாக்கு வாதம்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இ-டெண்டர் முறையில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும், நகராட்சி சார்பில் செய்யப்படும் அடிப்படை வசதி செலவை கோவிலில் இருந்து தர வேண்டும் என்ற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கும் ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகம் வெளியே அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது திருவிழா சுமுகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
நடவடிக்கை
மேலும் நகராட்சி தீர்மானம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீர்மானத்தை ரத்து செய்யக் கோரும் கோரிக்கை மனு நகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், நகராட்சி வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார் ஊர் நாட்டாமை ஆர.ஜி.எஸ்.சம்பத், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.