பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் 5 கேள்விகளை முன்வைத்துள்ளது
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 5 கேள்விகளை முன்வைத்துள்ளன;
பெங்களூரு: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 5 கேள்விகளை முன்வைத்துள்ளன.
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5 கேள்விகள்
தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரிடம் நாங்கள் 5 கேள்விகளை கேட்க விரும்புகிறோம். நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் மீது சுங்கவரி ரூ.9.48 ஆக இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி ரூ.28 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் டீசல் மீதான வரி ரூ.3.56-ல் இருந்து ரூ.21.80 ஆக உயர்த்தப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட வரியை எப்போது குறைக்க போகிறீர்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.27 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதை நாட்டு மக்களுக்கு எப்போது நிவாரணமாக கொடுக்க போகிறீர்கள். கடந்த 2014-ம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.414 ஆக இருந்தது. அதன் விலை தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலையை எப்போது குறைக்க போகிறீர்கள்.
சமையல் கியாஸ்
மன்மோகன் சிங் அரசு பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் கோடி மானியம் வழங்கியது. இந்த மானியத்தை மோடி அரசு எப்போது வழங்க போகிறது.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும்படி கர்நாடகம் உள்பட பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு எப்போது உத்தரவிட போகிறீர்கள்.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.