பெண்ணுக்கு மயக்க மருந்து தெளித்து; 40 கிராம் தாலிச்சங்கிலி கொள்ளை
சொரப் அருகே ‘பாலிஷ்' செய்து தருவதாக கூறி பெண்ணுக்கு மயக்க மருந்து தெளித்து அணிந்திருந்த 40 கிராம் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் 2 பேர் கொள்ளையடித்து சென்றனர்
சிவமொக்கா:
‘பாலிஷ்’ செய்து தருவதாக கூறி...
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா தியாகர்தி அருகே கோட்டே கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சப்பா. இவரது மனைவி சரோஜம்மா. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை அந்தபகுதியில் வீடு, வீடாக சென்று தங்கநகை, வெள்ளி பொருட்களை பாலிஷ் செய்து தருவதாக கூறி 2 பேர் வந்தனர்.
இதையறிந்த சரோஜம்மா, 2 பேரையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்று வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களை எடுத்து பாலிஷ் செய்து தரும்படி கொடுத்தார். அதன்படி அவர்கள் 2 பேரும் அந்த வெள்ளி பொருட்களை பாலிஷ் செய்து கொடுத்தனர்.
ரூ.2 லட்சம் தாலிச்சங்கிலி கொள்ளை
இதையடுத்து 2 பேரும், சரோஜம்மாவிடம் கழுத்தில் கிடக்கும் தாலிச்சங்கிலியை பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். இதனால் சரோஜம்மாவும், கழுத்தில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தாலி சங்கிலியை கழற்றி பாலிஷ்க்கு கொடுக்க முயன்றார். இந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும், சரோஜம்மா முகத்தில் மயக்க மருந்தை தெளித்துள்ளனர்.
இதில் சரோஜம்மா மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து 2 பேரும் அவரது தாலிச்சங்கிலியை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த சரோஜம்மா, நடந்த விஷயத்தை அக்கம்பக்கத்தினரிடமும், சொரப் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
வலைவீச்சு
அதன்பேரில் சொரப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பாலிஷ் செய்து தருவதாக கூறி மர்மநபர்கள் 2 பேர் மயக்க மருந்தை தெளித்து சரோஜம்மாவை மயக்கமடைய செய்து 40 கிராம தாலிசங்கிலியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சொரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.