உருளைக்கிழங்கு விலைவீழ்ச்சி

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2022-04-27 16:40 GMT
கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, பூண்டி கோவில்பட்டி, கூக்கால், குண்டுப்ப‌ட்டி உள்ளிட்ட‌ இடங்களில் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைகிற உருளைக்கிழங்குகள் திருச்சி, மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் சந்தைகளில் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுகிறது. 

மேலும் கேரளா, கர்நாடகா மாநில சந்தைகளுக்கும் அனுப்பப்படுகிறது. 
தற்போது கொடைக்கானலில் உருளைக்கிழங்கு அறுவடை பணி நடந்து வருகிறது. தொடர் ம‌ழை, பருவநிலை மாற்ற‌ம் ஆகியவற்றால் தற்போது உருளைக்கிழங்கு விளைச்சல் குறைந்துள்ளது. 

அதேநேரத்தில் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூலியாட்களின் சம்பளம், பராமரிப்பு, சாகுபடி செலவு ஆகியவற்றை கணக்கிடும் போது உருளைக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

இதனால் கொடைக்கானல் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே  உருளைகிழ‌ங்குகளை சேமித்து வைத்து விற்பனை செய்ய, கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் குளிர்பதனக்கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்