ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது

வந்தவாசியில் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-27 16:36 GMT
வந்தவாசி

வந்தவாசியில் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

ரூ.2,500 லஞ்சம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 63). இவர், வந்தவாசி காந்தி சாலையில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வீட்டு அடமான கடனாக ரூ.70 ஆயிரம் வாங்கினாராம். 

கடந்த 2012-ம் ஆண்டு கடனை திருப்பி செலுத்திய பெருமாள், அடமான பத்திரம் மற்றும் தடையில்லா சான்று கேட்டுள்ளார். ஆனால் அதனை தராமல் அலுவலக அதிகாரிகள் அவரை அலைக்கழித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் அடமான பத்திரம் மற்றும் தடையில்லா சான்றை வழங்க ரூ.2,500 அலுவலக உதவியாளர் சின்னராஜ் (53) லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. 

 அலுவலக உதவியாளர் கைது

லஞ்சம் வழங்க மனமில்லாத பெருமாள் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்போில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை பெருமாளிடம் கொடுத்து அனுப்பினர். 

இந்த பணத்தை சின்னராஜிடம், பெருமாள் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய சின்னராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டர்.

மேலும் செய்திகள்