சினிமா பைனான்சியரிடம் நவ்நீத் ரானா எம்.பி. ரூ.80 லட்சம் கடன்- அமலாக்கத்துறை விசாரணை நடத்துமா? என சஞ்சய் ராவத் கேள்வி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் லக்டாவாலாவிடம் நவ்நீத் ரானா ரூ.80 லட்சம் கடன் பெற்றதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-04-27 16:35 GMT
கோப்பு படம்
மும்பை, 
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் லக்டாவாலாவிடம் நவ்நீத் ரானா ரூ.80 லட்சம் கடன் பெற்றதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
தம்பதி கைது 
திரைப்பட நடிகையாக இருந்து அரசியல்வாதியானவர் நவ்நீத் ரானா. தற்போது அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக உள்ளார். இவர் சமீபத்தில் தனது கணவர் ரவி ரானாவுடன் முதல்-மந்திரியின் இல்லமான மாதோஸ்ரீ முன்பு அனுமன் பஜனை நடத்த போவதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். 
இதற்காக மும்பை வந்த நவ்நீத் ரானா, கணவர் ரவி ரானாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது தேசத்துரோகம், இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
இந்த நிலையில் இவர்களின் கைது நடவடிக்கைக்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. 
புதிய குற்றச்சாட்டு
இதற்கிடையே சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், நவநீத் ரானா மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணம் அடைந்த சினிமா பைனான்சியர் யூசுப் லக்டாவாலாவிடம் இருந்து நவ்நீத் ரானா ரூ.80 லட்சம் கடன் பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். 
மேலும் இது குறித்து அவர், “சிறையில் இருந்த யூசுப் லக்டாவாலாவிடம் இருந்து நவ்நீத் ரானா ரூ.80 லட்சம் கடன் பெற்றுள்ளார். எனது கேள்வி என்னவென்றால் அமலாக்கத்துறை இதுகுறித்து விசாரணை நடத்துகிறதா?” என்றார். 
 நிழல் உலக தொடர்பு
இதேபோல சஞ்சய் ராவத் இன்று வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், “நிழல் உலகத்துடன் தொடர்புடைய ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட யூசுப் லக்டாவாலா, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது உயிரிழந்தார். யூசுப் லக்டாவாலா சட்டவிரோத பணம் இப்போது நவ்நீத் ரானாவின் கணக்குகளில் உள்ளது. அமலாக்கத்துறை எப்போது நவ்நீத் ரானாவுக்கு தேநீர் வழங்கும்? பா.ஜனதா ஏன் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். 
மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில், 1993-ம்  ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் போலவே, அனுமன் பஜனை தொடர்பான அரசியல் சர்ச்சைக்கு பின்னாலும் நிழல் உலக தொடர்பு இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது” என்றார்.  நவ்நீத் ரானாவை காப்பாற்ற பா.ஜனதா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் செய்திகள்