அறநிலையத்துறை, வருவாய்த்துறை பதிவேடுகள் சரிபார்ப்பு கூட்டம்

உடுமலையில், கோவில் நிலங்களை பாதுகாப்பதற்காக, அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை பதிவேடுகளை சரிபார்ப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2022-04-27 15:26 GMT
உடுமலை
உடுமலையில், கோவில் நிலங்களை பாதுகாப்பதற்காக, அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை பதிவேடுகளை சரிபார்ப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தது.
கோவில் சொத்துக்கள்
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அமைவிடம், கோவில்களுக்கு சொந்தமான நிலம், மனை, கட்டிடம் மற்றும் இதர பிற சொத்துக்களை தலத்தணிக்கை செய்து, அதன் விபரங்களை ஆவணங்களின்படி இணையத்தில் பதிவேற்றம் செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனித்தாசில்தார்களுக்கு (ஆலயநிலங்கள்) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா வாரியாக, இந்த பணிகளுக்காக அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள பதிவேடுகள், பட்டா உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிகள் நடந்துவருகிறது.
பதிவேடுகள் சரிபார்க்கும் பணி
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 252 கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு உள்ள சொத்துக்கள் குறித்து அறநிலையத்துறை கோவில் பதிவேடுகளில் உள்ள விபரங்களும், வருவாய்துறையில் உள்ள பதிவேடுகளில் உள்ள விபரங்களும் சரியாக உள்ளதா என்று ஒப்பிட்டுப்பார்த்து, அதன்தொடர் பணியாக நில அளவையாளர் மூலமாக அந்த இடங்களை அளவிட்டு, அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதற்கான கற்கள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக வருவாய் கிராமங்களின் பதிவேடுகளை முழுமையாக ஆய்வு செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் உடுமலை தாலுகாவில் உள்ள கோவில் சொத்துக்களை பாதுகாத்தல் தொடர்பாக பதிவேடுகள், ஆவணங்களை சரிபார்த்தலுக்கான கூட்டம் நேற்று  உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை (ஆலய நிலங்கள்) தனித்தாசில்தார் வி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உடுமலை தாசில்தார் கணேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், அறநிலையத்துறை ஆய்வாளர், கோவில் செயல் அலுவலர்கள், ஊழியர்கள் பதிவேடுகளுடன் கலந்து கொண்டனர்.அப்போது அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையில் உள்ள பதிவேடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பணிகள் நடந்தது.

மேலும் செய்திகள்