ரூ2 கோடி கொள்ளையடித்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் கைது
திருப்பூரில் கட்டிட வேலை செய்ய வந்த வீட்டில், கட்டுக்கட்டாக ரூ.2 கோடி கொள்ளையடித்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் கார், வீடு, நகை வாங்கி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
வீரபாண்டி
திருப்பூரில் கட்டிட வேலை செய்ய வந்த வீட்டில், கட்டுக்கட்டாக ரூ.2 கோடி கொள்ளையடித்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் கார், வீடு, நகை வாங்கி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
பனியன் நிறுவன அதிபர்
திருப்பூர் மங்கலம் சாலை குள்ளேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 73). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். பனியன் நிறுவன வளாகத்திலேயே அவரது வீடும் உள்ளது. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
எனவே வீட்டில் துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி மட்டுமே வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு எதிரே, துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடு ஒன்றும் உள்ளது. அதை அவர் பயன்படுத்துவதில்லை.
நகை-பணம் திருட்டு
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி தனது பழைய வீட்டில் இருந்த 2 சவரன் நகை, ரூ.1½ லட்சம் மற்றும் பத்திரங்களின் நகல்கள் திருட்டு போனதாக திருப்பூர் மத்திய போலீசில் துரைசாமி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து துரைசாமியின் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த மேஸ்திரி சதீஷ் (29), அவரது தம்பி சக்தி (24), தொழிலாளர்கள் தாமோதரன் (33) மற்றும் ராதாகிருஷ்ணன் (53) ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
துரைசாமியின் வீட்டில் கட்டுக்கட்டாக 3 முறை அவர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது கூட தெரியாமல் துரைசாமி இருந்துள்ளார். மூன்றாவது முறையாக பணம் திருடப்பட்ட பின்னரே இது பற்றி துரைசாமி மத்திய போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:-
ரூ.2 கோடி கொள்ளை
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டிட தொழிலாளர்கள் 4 பேரும் துரைசாமியின் பழைய வீட்டில் காம்பவுண்டு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டின் ஓர் அறையில், ஒரு துணி மூட்டையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததை பார்த்துள்ளனர். மொத்தமாக பணத்தை பார்த்ததும் அவர்கள் அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்யுள்ளனர்.
அதன்படி முதல் தடவை பணத்தை மூட்டையாக கட்டி அள்ளிச் சென்றனர். அதன் பின்னர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மீண்டும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு மொத்தம் ரூ.2 கோடிக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
உல்லாச வாழ்க்கை
கொள்ளையடித்த பணத்தை வைத்து கடந்த 3 மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலையில் ஜாலியாக செலவு செய்து, உல்லாச வாழ்க்கை நடத்தியுள்ளனர். மேலும் வீடு, நகை, கார் என வாங்கியுள்ளனர். அவர்கள் மேலும் ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.