தெக்கலூர் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ் சிறைபிடிப்பு
அவினாசி அருகே தெக்கலூரில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
அவினாசி
அவினாசி அருகே தெக்கலூரில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பஸ் சிறைபிடிப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் கோவை மெயின் ரோட்டில் தெக்கலூர் கிராமம் உள்ளது. ஒரு சில பஸ்கள் தவிர மற்ற பஸ்கள் தெக்கலூருக்கு வராமல் பைபாஸ் ரோட்டில் சென்றுவிடுவதால் பயணிகள் தெக்கலூரில் பஸ்சுக்காக பல மணிநேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவையிருந்து திருப்பூருக்கு புறப்பட்ட தனியார் பஸ்சில் கல்லூரி மாணவர்கள் தெக்கலூருக்குடிக்கெட் கேட்டுள்ளனர். ஆனால் கண்டக்டர் தெக்கலூரில் பஸ் நிற்காது என்று பஸ்சிலிருந்து அவர்களை இறங்க சொன்னதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் தெக்கலூரில் உள்ள அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தெக்கலூரில் ஒன்றுதிரண்டு குறிப்பிட்ட பஸ்சை சிறைபிடித்து கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்டக்டர் மற்றும் பொதுமக்களிடையே கைகலப்பு ஏற்பட்டு கண்டக்டர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் புகார்
இதுகுறித்து தெக்கலூர் பகுதி மக்கள் அவினாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
அவினாசி, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கு தினசரி செல்லும் பொதுமக்களுக்கு தெக்கலூரில் பஸ்களை நிறுத்துவதில்லை. கேட்டால் நேரம் போதவில்லை என்று வாதம் செய்கின்றனர். இதேபோல் ஒரு சில அரசு பஸ்களும் நிற்பதில்லை. இதுகுறித்து பலமுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை இதற்கு எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை. எனவே இனியாவது தெக்கலூரில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.