கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் தேவை இல்லை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கொரோனா பரவலை தடுக்க தற்போதைக்கு கடும் கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
கடுமையான கட்டுப்பாடுகள்
பிரதமர் மோடி கொரோனா 4-வது அலையை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு முன்பு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா 4-வது அலை வருகிற ஜூன் மாதம் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதை விட கடுமையான கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தேவை இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உரிய காலம் முடிவடைந்ததும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.
மருத்துவ பணியாளர்கள்
பிரதமர் மோடி கூறும் ஆலோசனைகளை அமல்படுத்துவோம். கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை பரவல் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணியாளர்களை 6 மாதங்களுக்கு நியமனம் செய்தோம். அவர்களின் பணி காலத்தை 18 மாதங்கள் வரை நீட்டித்தோம்.
அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து விட்டதால் அவர்களை பணியில் இருந்து விடுவித்தோம். இப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை 6 மாதங்களுக்கு மீண்டும் பணி நியமனம் செய்ய ஆலோசித்து வருகிறோம். நிதித்துறையின் ஒப்புதலை கேட்டுள்ளோம்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.