தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
பொங்கலூர் பகுதியில் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கலூர்
பொங்கலூர் பகுதியில் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காய்கறி சாகுபடி
திருப்பூரை அடுத்த பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தக்காளி, வெண்டை, காலிபிளவர், பச்சை மிளகாய், கத்தரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் டெம்போ வாகனங்கள் மூலம் திருப்பூரில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த பகுதியில் இருந்து தினசரி காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிக அளவில் சாகுபடி
இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தற்போது அதிக அளவில் விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை கடுமையாக சரிவு ஏற்பட்டது.
ஒரு கிலோ தக்காளி ரூ.5 மற்றும் அதற்கு கீழும் விற்பனையானது. இதனால் தோட்டங்களில் உள்ள தக்காளி பழத்தை பறிக்காமலும், விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு சரியான விலை கிடைக்காமல் சாலைகளில் கொட்டியும் விவசாயிகள் சென்றது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தக்காளி விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தற்போது ரூ.450-க்கு விற்பனையாகிறது. இதுவே சில்லறை விற்பனையில் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதாகவும் மேலும் உயர்ந்தால் அது தங்களுக்கு அதிகப்படியான லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தனர்.
இனி வரும் நாட்களில் கடுமையான வெயில் இருக்கும் என்பதால் விளைச்சல் கொஞ்சம் குறையும் எனவும், இதன் காரணமாக விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.