கோவை
கோவை தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தண்டுமாரியம்மன் கோவில்
கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அபிஷேக பூஜை, அலங்கார பூஜைகளும், யாக சாலை பூஜைகளும் நடந்தன.
அதுபோன்று நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. இதில் அம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி ஊர்வலம் நேற்று நடந்தது.
தீச்சட்டி ஊர்வலம்
இதற்காக ஏராளமான பக்தர்கள் கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, தீச்சட்டிகளை தங்கள் கையில் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். தீச்சட்டி எடுத்த பக்தர்கள் முதலில் செல்ல, அவர்களை பின்தொடர்ந்து பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக தண்டு மாரியம்மன் கோவிலை நோக்கி வந்தனர்.
இந்த ஊர்வலம் ஒப்பணக்காரவீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக் பாண்ட் ரோடு, அவினாசி ரோடு வழியாக தண்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. தீச் சட்டியை ஏந்தி வந்த பக்தர்கள், அங்கு தாங்கள் ஏந்தி வந்த தீச்சட்டியை இறக்கி வைத்து அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கையில் கட்டி இருந்த காப்பு கயிற்றை கழற்றி விரதத்தை முடித்தனர்.
போக்குவரத்து மாற்றம்
இந்த ஊர்வலத்தையொட்டி கோவை மாநகர பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் ஊர்வலம் சென்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவர்கள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) காலையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும், காலை 11 மணிக்கு மஞ்சள்நீர் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியிறக்குதல் மற்றும் கம்பம் கலைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் வருகிற 1-ந் தேதி வசந்த உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.